அபாயா விடயம் குறித்து தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை!

முஸ்லிம்களின் அபாயா விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசனை காட்டவில்லையாயின் வேறு இடங்களில் ஏதொவொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

முஸ்லிம்களின் அபாயாவை பாடசாலைக்கு அணிந்து வரக் கூடாது என்று சொல்கின்ற ஒரு படித்த சமூகம் எமது மாகாணத்திற்குள் இருந்து வெளிச் செல்லுமாக இருந்தால் அது நல்ல செய்தியாக நான் பார்க்கவில்லை.

இந்த கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் அரசியல் தலைவர்களும் விழிப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தேசியத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து முடிந்து விட்டது. ஆனால் நாங்கள் இதற்கு சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இது கவலையாக இருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் நீண்ட வரலாறு கொண்ட எதிர்பார்ப்புடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் அபாயாவை பற்றி கதைக்க வேண்டும் என்று போர்க் கொடி தூக்குகின்ற கற்ற சமூகம் இருக்குமாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டது. இறுதியாகவுள்ள அபாயா பிரச்சினை தேசியத்தில் தள்ளப்பட்டுள்ளது துரதிஷ்ட வசமாகும்.

எனவே இந்த விடயத்தில் தேசியத்தில், மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கவனம் செலுத்தி, இந்த வேலைத் திட்டத்தில் தங்களுடைய பதிவுகளை செய்ய வேண்டி உள்ளது.

மட்டக்களப்பில் வறுமை குறைந்தது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமை குறைந்தது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் – ஸம்ஸம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

இதில் உரையாற்றிய பிரதியமைச்சர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் வறுமை 19.8 வீதம் இருந்தது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு எடுத்துக் கொண்ட முயற்சியால் 11.5 வீதமான அளவுக்கு வறுமை குறைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைக்கலாம் என்ற வேலைத்திட்டம் போன்று எதிர்காலத்தில் இந்த பணியைச் செய்யக் கூடியதாக இருந்தால் 8 வீதமாக வறுமையைகுறைக்கலாம் என் நான் நம்புகின்றேன் என்றார் என்றார்.