ஆட்சியில் புதிய மாற்றம்: கொழும்பில் ஆட்டம் காணும் அரசியல்…!

இலங்கையில் நாளை முதல் புதிய அரசாங்கம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றியடைந்தால், சமகால அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகும்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாகவும், இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய சில கட்சிகளின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியடைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய புதிய பிரதமர் உட்பட புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய அரசாங்கம் அல்லாத தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதென்றால், அங்கு அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 45க்கு மேல் அதிகரிக்க கூடாதெனவும், 19ஆம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.