இனியேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள்: அரசாங்கத்திடம் நாமல் வேண்டுகோள்

நான்கு ஆண்டு காலமாக ஏமாற்றியது போதும். எஞ்சிய குறுகிய காலத்திற்கேனும் மக்களுக்காக சேவையாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இன்று வடக்கு மக்களின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆனால் நீங்கள் ‘என்டர்பிரைஸ் சிறிலாங்கா’ என்று கூறிக் மீளச் செலுத்த முடியாத வகையில் கடன்களைக் கொடுக்கிறீர்கள்.

வீடு கட்ட கடன் கொடுக்கின்றீர்கள். ஆனால் மக்கள் காணி இல்லாமல், காணி உறுதிகள் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களின் காணிகள் வன இலாக்காவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு கடன் சுமை மாத்திரமே மிஞ்சுகிறது.

மஹிந்த சீனாவிடம் கடன் வாங்கியதாக குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கவில்iலை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஆனால் தேர்தல் காலத்தில் மீண்டும் சீனாவின் கடன் குறித்து பேசுகிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக மக்களை ஏமாற்றினார்கள். முட்டாள்கள் ஆக்கினார்கள் மஹிந்த குறித்து பேசியும், அவரை விமர்சித்து கொண்டுமே இருந்தார்கள்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கின்றன. இந்த காலத்திலேனும் மக்களுக்காக பணியாற்றுங்கள். மக்களுக்கு மாணியங்களை வழங்கி அவர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.