ஒரே தடவையில் பெற்ற மூன்று குழந்தைகள் வளர்க்க முடியாது தவிக்கும் குடும்பம்!

ஹட்டனில் ஒரே சூலில் பிறந்த 3 குழந்தைகளை வளர்க்க முடியாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

ஹட்டன் திம்புல பொலிஸ் பிரிவின் கிரிஸ்டஸ்பாம் தோட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

49 வயதுடைய வீரன் கிருஷ்ணகுமாரன் அவரின் மனைவியான 39 வயதுடைய வேலு சரோஜாதேவி ஆகியோருக்கு, கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி டிக்கோயா பிரதான வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை சத்திரசிகிச்சை மூலம் பிரசவித்துள்ளார்.

எடை குறைவாக பிறந்த இந்த குழந்தைகளை கம்பளை, பேராதெனிய மற்றும் அவிசாவளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்ப வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இயந்திரங்களின் உதவியுடன் குறித்த குழந்தைகள் வளர்ந்துள்ளது. பின்னர் வைத்தியர்கள் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 வயது மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் ஹட்டன் மற்றும் கொட்டகல பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.

குழந்தைகளின் தந்தை கிருஷ்ணகுமார் கூலி வேலை செய்து வருகின்ற நிலையில், அவரது மனைவி வேலு சரோஜா தேவி கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருகின்றார்.

இந்த மூன்று குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு போதுமான அளவு தாய் பால் இல்லாமையினால் வைத்தியர்கள் பால் மா வகைகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் இவர்களுக்கு கொள்வனவு செய்ய தேவையான பணம் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் பாரிய பொருளாதார பிரச்சினைகளுடனும் மிகவும் சிரமத்தோடு தங்கள் குடும்பத்தினர் வாழ்வதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.