கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளோம்!

இலங்கை அரசியல், உலக அரசியல் நலன்களுக்காக எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம், மலையக பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் நிதியாதாரங்கள் காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார் .

தொடர்ந்தும் இவர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் பல்வேறு வகையில் பின் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளோம். எம்மையும் எம் அடையாளங்களையும் யார் அழித்தாலும் மீண்டும் மீண்டெழ எமக்கு கல்வியே அடிநாதமாய் விளங்கி வருகின்றது.

இதனை நன்கு விளங்கிக் கொண்ட எம்முன்னோர்கள் சிறு வயதில் இருந்தே கல்வியையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்து வந்தனர்.

உண்மையில் எமது மாணவர்களுக்கு உதவ பல்வேறு உலக அமைப்புக்கள் அணுகி வருகின்றனர். நாமும் அவர்களோடு இன்முகத்தோடு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம்.

எனினும் அந்த நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. நிதி ஆதாரம் தருகின்றோம்.

தமிழ் மக்களை எந்த நேரமும் கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை முன்வைக்கின்றனர். எமக்கு எமது மக்களின் துயர் துடைப்பே முக்கியமானது.

இலங்கை அரசியல் உலக அரசியல் நலன்களுக்காகவும், நாம் எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை. எம்மால் முடியும். எமது நாட்டில் வசிக்கும் நல்ல மனம் படைத்த நல்லுள்ளங்களின் உதவியுடன் பலமான மக்கள் நலனோம்பும் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.