கவனிப்பாரற்ற இவ்வாறான வீதிகளிலும் மக்கள் பயணிக்கின்றனர்..!

வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் கவனிப்பாரற்று கிடப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற இந்த முக்கியமான வீதிகள் சேதமடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் உரியவர்களுக்கு முறையிட்டும், போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

வவுனியா மன்னார் பிரதான வீதி, நெளுக்குளம் ஊடாக வீரபுரம் செல்லும் வீதி, பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி, குழுமாட்டுச் சந்தியூடாக சுந்தரபுரம் செல்லும் வீதி, பிரமனாலங்குளம் பெரிய தம்பனை வீதி,

கோவில்குள மூடாக சிதம்பரபுரம் செல்லும் வீதி, ஓமந்தை சேமமடு வீதி, உள்ளிட்ட மக்கள் பாவனை அதிகமுள்ள வீதிகள் அடங்கலாக வவுனியா மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஒவ்வாத வீதிகளாகவே காணப்படுகின்றன.

யுத்த காலங்களை விட தற்போது தான் வீதிகளின் நிலை கேவலமாக உள்ளது. இந்த வீதிகளில் ஒரு சில வீதிகளை தவிர ஏனைய பெரும்பாலானவை மாகாண அமைச்சுக்குள் வருவதனால் வட மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும், மத்திய அரசும் வவுனியா மாவட்டத்தை புறக்கணிக்கின்றனவா?

இத் துறைசார் அமைச்சர்கள் வர இருக்கின்ற தேர்தல்களை கணக்கில் கொண்டு தமக்கு வாக்களிக்க கூடிய மக்கள் இருக்கின்ற தொகுதியின் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனரா? என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வடக்கின் மிக முக்கிய போக்குவரத்து மையமான வவுனியாவின் வீதிகள் சீரழிந்து உள்ளமை வவுனியா மக்களுக்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் சிரமத்தினை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக தினமும் மன்னார் நகரத்தில் இருந்தும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் இருந்தும் வவுனியாவிற்கு பயணம் செய்யும் ஆயிரக்கணக்கானவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த வீதிகளை துரித கதியில் புனரமைக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.