கிழக்குக்கு தமிழ் முதலமைச்சர் வேண்டும்: வலுக்கிறது கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கு திட்டங்களை தீட்டி ஆரோக்கியமான செயற்பாடுகளை எந்தக்கட்சி முன்னெடுக்கின்றதோ அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தயாராகவுள்ளது என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியூடாக சென்ற வெற்றிபெற்ற வேட்பாளர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போததே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சூழலுக்கு ஏற்றாற்போல் வாக்களிப்பதை தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். நன்கு சேவையாற்றக் கூடியவர்களை தெரிவுசெய்யவேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒரு துப்பாக்கி இருக்கின்றது.

அதுதான் வாக்கு என்னும் துப்பாக்கி. அதன் மூலம் ஒருவரை வெற்றி பெறவைக்கவும் முடியும் தோல்வியுறச்செய்யவும் முடியும்.

எமது வாக்குகளை மதுவுக்காகவோ, நிதியுதவிகளுக்காகவோ எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடாது. இதனை கவனத்தில்கொண்டு எதிர்காலத்தில் மக்கள் செயற்படவேண்டும்.

தமிழ் மக்களை விற்றுபிழைக்கும் கட்சிகளே உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள். அது இல்லாதபட்சத்தில் தேசிய கட்சிகள் மட்டக்களப்பில் பலப்படுத்தப்படும் செய்தியை தமிழ் மக்கள் தங்களது வாக்குகளினால் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வழங்கியுள்ளனர்.

மக்களின் அந்த ஆணையை,செய்தியை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எந்த தமிழ் கட்சி முன்னெடுக்கின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பினை வழங்கமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு சபைகளில் எங்களின் கட்சியின் பங்களிப்பு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிசெய்யமுடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை செய்துள்ளோம்.

பல கட்சிகள் உறுதியான முடிவுகளை எங்களுக்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துள்ளோம். அந்த முடிவுகளுக்கு ஏற்றவாறு செயற்பாடுகள் அமையும்.

கிழக்கு மாகாணத்தில் நிலமைகள் தெரியாமல், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் ஒற்றுமையினை வலியுறுத்த தெரியாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையினை சிதைக்கும் வகையில் சில அரசியல் தலைவர்கள் ஊடக அறிக்கையினை வெளியிடுவது ஏற்புடையதல்ல.

குறித்த மாகாணத்தில் தமிழர்களின் கணிசமான வாக்குகள் அளிக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகள் ஒரு இலட்சத்து 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அழிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழரைக் கொண்டுவாருங்கள் என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமானால் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்காது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையினை வலியுறுத்தும் வகையில் எந்த கட்சி செயற்படுகின்றதோ அக்கட்சிக்கு எமது கட்சியின் ஆதரவு இருக்கும்.

எதிர்காலத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கு திட்டங்களை தீட்டி ஆரோக்கியமான செயற்பாடுகளை எந்தக்கட்சி முன்னெடுக்கின்றதோ அவர்களுடன் இணைந்துசெயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கடந்த காலத்தில் நாங்கள் வாக்களிக்காமல் இருந்துவிட்டு 11 தமிழ் உறுப்பினர்கள் இருந்துகொண்டு 7 உறுப்பினர்களுக்கு முதலமைச்சரை கொடுத்ததாக விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

நாங்கள் வாக்குளை அளிக்காமல் 11பேர் இருந்துகொண்டு 17 பேர் உறுப்பினர்களைக்கொண்டவர்களிடம் நாங்கள் சவால்விடமுடியாது.

நான் மூன்று தடவைகள் மாகாணசபைக்கு சென்றவன் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழர்கள் அதிக ஆசனங்களை ஒருபோதும் பெறவில்லை.

முஸ்லிம் கட்சிகள் 16க்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெற்றுக்கொண்டுள்ளன.

நாங்கள் எதிர்காலத்தில் ஒற்றுமையில் பலவீனப்படும் சந்தர்ப்பத்தில்,வாக்களிக்க தவறும்பட்சத்தில் எதிர்காலத்திலும் ஆபத்து எதிர்நோக்கியுள்ளது என்பதை எனது அனுபவத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் தமிழ் முதலமைச்சரை கிழக்கு மாகாணத்தில் கொண்டுவரவேண்டும் என்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் இன்று முன்னெடுத்துள்ளோம்.

அனைத்து கிழக்கு கட்சிகளும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் கிழக்கு தமிழ் மக்கள் தலை நிமர்ந்து வாழ்வதற்காக கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்காக எமது கட்சி உறுதியாக செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் கிராமத்தின் முக்கிஸ்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.