கூட்டமைப்பின் போக்கு குறித்து மக்கள் கவலை!

நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் நாடு முழுவதும் பல சபைகளிலும் தொங்கு ஆட்சியே சாத்தியமாகி இருக்கின்றது. அது போன்று வடக்கிலும் பல சபைகளில் தொங்கு ஆட்சியே அமைந்திருக்கிறது. மூன்று சபைகள் தவிர மற்றைய எல்லாச் சபைகளிலுமே ஆட்சியை யார் அமைப்பது என்பது கேள்விக்குறி தான்.

நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளில் பெரும்பான்மை ஆசனங்களை வென்றது. எனினும் அது ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையாக இருக்கவில்லை. ஒரு சில சபைகளில் அந்தப் பெரும்பான்மையையும் அது இழந்திருந்தது.

கூட்டமைப்பைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றைய எல்லாக் கட்சிகள், சுயேச்சைகளையும் சேர்த்துப் பார்த்தால் அவற்றின் வசம் அதிக ஆசனங்கள் இருந்தன.

கடந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வென்றிருந்ததும் இதற்கொரு முக்கிய காரணம்.

இத்தகையதொரு பின்னணியிலேயே உள்ளுராட்சிச் சபைகளில் ஆட்சியமைக்கும் பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.

வடக்கில் முதலாவதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் போட்டியே நடைபெற்றது. தொடர்ந்து சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்பவற்றின் ஆட்சிகளும் தீர்மானிக்கப்பட்டன.

இன்றைய நிலவரப்படி இந்த அனைத்துச் சபைகளிலும் ஆட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருக்கின்றது. நெடுந்தீவு தவிர்ந்த ஏனை சபைகளிலும் இந்த நிலமை தொடர்வதற்கே வாய்ப்புகளும் அதிகமுண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டிய தமிழ் மக்கள், குறிப்பாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், வெட்கித் தலைகுனியும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டுச் சேர்ந்திருக்கும் தரப்புக்கள்.

இதுவரை காலமும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியும் அதன் வழியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயணித்தனவோ அதிலிருந்து முற்றிலுமாக விலகிச் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது.

எந்தச் சக்திகளுக்கு எதிராக, எந்த இனவாதக் கட்சிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு 5000 இளைஞர்கள் வாருங்கள் தமீழீழத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்று கூறி தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தளபதி அ.அமிர்தலிங்கத்துக்குச் சிலை திறந்து சில வாரங்களுக்குள் அந்த இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றது கூட்டமைப்பு.

அதுபோன்றே இறுதிப் போர் வரையிலும் இராணுவத்தினருடன் அவர்களின் உளவாளிகளாகவும், அரசியல் ஏவலாளிகளாகவும் செயற்பட்டு வந்த தமிழ்க் கட்சிகளுடனும் தன்னுடைய கட்சி அரசியல் நலனுக்காகச் சேர்ந்து போகத் தயாராகி இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் இந்தப் போக்கும் பயணமும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

இதே உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்தவிடம் தோல்வியடைந்தவுடனே புதிய அரசமைப்பு முயற்சிகளைக் கைவிட்டு தமிழர்களை ஏமாளிகளாக்க முயலும் தெற்கின் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் , சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணி வைத்துக் கொண்டு விட்டு, ஜெனிவாவிலும் அமெரிக்காவிலும் போய் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுங்கள் என்று கோருவது அரசியல் ஏமாற்று அன்றி வேறென்ன?

தமிழ் மக்களின் நலன் கருதி ஒரு அரசியல் கொள்கையில் ஒற்றுமைப்பட்டு வரமுடியாத இந்தக் கட்சிகள் அனைத்தும், கட்சி அரசியல் எனும் சுயநலத்திற்காக ஒன்று சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் கூறும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!” என்கிற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கப் போகின்றோம் என்கிற கோசத்துடன் மிகக் கீழ் நிலை அரசியலைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது