கூட்டமைப்பை அதிர வைத்த விக்கியின் எச்சரிக்கை..!

அடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய கட்சி ஒன்றை தொடங்குவதற்குரிய காலம் கனிந்து விட்டதோ எனத் தாம் அறியேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி. விக்னேஸ்வரன் நிறுத்தப்பட மாட்டார் என கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய வாராந்த கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குக்கு தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

எனினும், அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா?

இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, தாம் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அதன் தலைமைத்துவத்தின் தவறான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலுக்கு வருவேன் என்று தாம் நினைத்திருக்கவில்லை என்றும், வந்த பின்னர் மக்களின் பேராதரவும் அன்பும் தம்மை  நெகிழ வைத்துவிட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமது மக்களுக்கு தாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் தாம் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை தாம் அறிவதாகவும், தாம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும்.

இந்தப் பின்னணியில், மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியமானதாகும்.

எனவே, ஏனையோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து அழைப்பு வரக்கூடிய சாத்தியம் இல்லை.

எனவே, மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக உடன்படும் வேறு ஒரு கட்சிக் கூடாகத் தேர்தலில் நிற்கலாம்.

புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள்.

கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள்.

அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ எனத் தாம் அறியேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான  பயணப் பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் புத்திஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே, திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு தமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.