சிறுவனை கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகியதாக நபருக்கு நடந்த நிலை!

பன்னிரண்டு வயது சிறுவனை கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படும் சிறுவனின் வீட்டில் தங்கியிருந்த ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர், சிறுவனின் தாயாருடன் மறைமுக தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவனுக்கு தாயின் அரவணைப்பு சரியாக கிடைக்காததுடன் குறித்த நபர் சிறுவனை அச்சுறுத்தி வந்துள்ளதால், சிறுவன் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அதிகார சபையின் தலைவரது உத்தரவுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேக நபரை கைதுசெய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்த நீதிமன்றம், சிறுவனின் வீட்டிற்கு செல்ல தடைவிதித்துள்ளது. சிறுவனும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

தாயை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், இரண்டு லட்சம் ரூபா பிணை வைப்பின் அடிப்படையில் தாயிடம் சிறுவனை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதுடன், நன்னடத்தை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

சிறுவர்களை மனரீதியான உளைச்சல்களுக்கு உட்படுத்துவதால், அவர்களின் முழு வாழ்க்கையும் பாதிப்படைய காரணமாக அமையும் எனவும் அப்போது அந்த பிள்ளைகள் தமது குடும்பம் மற்றும் சமூகம் மீது ஆத்திரம் கொள்ளும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.