“ஜனாதிபதியின் நிதியொதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்க காரணம் இதுதான்!”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த நான்கு வருடங்களில் 54 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் அதனை தனது பிரதேச அபிவிருத்திக்கு கூட பயன்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இம்முறை அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

தற்போது சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கொண்டிருந்த நட்புறவு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி, மக்களின் தேவையை நிறைவேற்றும் ஜனாதிபதியாக செயற்படுவார் என நாம் எதிர்பார்த்தோம்.

எனினும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு மாத்திரம் அபிவிருத்தியினை மேற்கொள்பவராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டார். ஆனால் மீண்டும் தனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய வாய்ப்பு அவருக்கு காணப்படுகின்றது. அதனை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.