நாடாளுமன்றத்தில் வாள்வெட்டு குழுவும் உருவாகலாம் – மஹிந்தர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு அமைய பெரும்பான்மை அதிகாரத்தை நிரூபிக்க வேண்டுமென்றால், அதனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த, சபாநாயகர் என்பவர் சுயாதீனமாக செயற்பட வேண்டும். இதற்கு முன்னர் நாங்கள் பல சபாநாயகர்களை பார்த்திருக்கின்றோம். அவர்கள் தங்களுக்கான கதிரையின் கௌரவத்தை பாதுகாத்தார்கள்.

சம்பிரதாய முறையில் நடத்துமாறு ஜனாதிபதி கூறினார். எனினும் சபாநாயகர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. சட்டரீதியாக செயற்படவில்லை. உரிய முறையில் செயற்பட்டிருந்தால் நாங்களும் சந்தர்ப்பம் வழங்கியிருப்போம்.

நாடாளுமன்றத்திற்கு கத்தியுடன் நுழைகின்றார்கள். இன்று கொஞ்ச நாட்களில் வாளுடன் நுழையவும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் சபாநாயகரே காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.