பதினேழு வயதில் இருந்து பாதுகாத்து வந்ததை பறிகொடுத்தார் மூதாட்டி!

நாவற்குழியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு சங்கிலி, தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நாவற்குழி பகுதியில் தனிமையில் வசித்துவந்த மூதாட்டியின் வீட்டு கூரையை பிரித்து நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று மூதாட்டியை தாக்கி , அவரின் முகத்தை துணியால் கட்டி அவரை அங்கிருந்த கதிரை ஒன்றில் கட்டி வைத்து விட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி , தோடு என்பவற்றை அபகரித்ததுடன் , வீட்டினுள் தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றையும் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர் மூதாட்டியின் அவல குரல் கேட்டு அயலவர்கள் சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சண்முகநாதன் நித்தியலட்சுமி (வயது 70) என்பவரே காயமடைந்தார்.

அதேவேளை தனக்கு 17 வயதிருக்கும் போது தந்தை தோடுகளை வாங்கி தந்ததாகவும் , தாய் சங்கிலியை வாங்கி தந்ததாகவும் , அவற்றையே இதுவரை காலம் அணிந்து இருந்த போது அவற்றை கொள்ளையர்கள் அபகரித்து சென்று விட்டனர் என கண்ணீர் மல்க சாவகச்சேரி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மூதாட்டி.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.