பல நாள் கள்ளன் நேற்று மட்டக்களப்பில் சிக்கினான்!

மட்டக்களப்பு தலைநகரில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வரும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 30 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மண்டூர் பிரதேசத்தில், 10 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.என். பண்டார தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், இவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் 8 வீடுகள் மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வீடு உட்பட 9 வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுள்ளதாகவும், இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை மத்தியமுகாம், சம்மாந்துறை, கல்முனை, களுவாஞ்சிக்குடி கிரான், போன்ற பிரதேசங்களில் உள்ள நகை அடகு வைக்கும் கடைகளில் அடகு வைத்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.