பழைமை வாய்ந்த லயன் அழிப்பு: அரசியல்வாதிகள் புதிய முயற்சி…!

சுமார் 150 வருடங்கள் பழைமை வாய்ந்த மலையக பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் லயன் வீடுகளை அழித்து தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வரும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்பின் பேரில் லயன் வீடுகளை அழிக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அக்கரபத்தனை – சின்ன தோட்டத்தில் இருந்து இந்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் 72 வீடுகள் அடங்கிய புதிய கிராமம் அமைக்கப்பட்டு அதற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, வீதி போக்குவரத்து வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 72 வீடுகளையும் பெற்ற குடும்பங்கள் பழைய லயன் அறைகளில் வாழ்ந்து வந்தனர். அந்த லயன் அறைகளை இன்று உத்தியோகபூர்வமாக அழிக்கும் திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வடிவேல் புத்திரசிகாமணி தலைமையில் இடம்பெற்றது.

கடந்த பொதுத் தேர்தலில் லயன் வீடுகள் அழிக்கப்படும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு லயன் அறைகள் அழிக்கப்படுகின்றன.

தேயிலை மரங்களை பிடுங்கி வீடுகளை அமைக்க காணி பெறுவதற்கு பதிலாக பழைய லயன் அறைகளை அழித்து அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக இதுவரை 5,000 வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 4,000 வீடுகள் கட்டப்படுவதுடன் மேலும் 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

குறித்த வீடுகளை பெறும் மக்கள் வாழும் பழைய லயன் அறைகளை உடைத்து அவ்விடத்தில் புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

எவ்வாறான இடையூறுகள் வந்தாலும் பழைய லயன் அறைகளை உடைக்கும் திட்டம் கைவிடப்பட மாட்டாதென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அக்கரபத்தனை – சின்ன தோட்டத்தில் முகாமைத்துவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இன்றைய லயன் உடைப்பு திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.