மட்டக்களப்பில் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன: வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று வருடத்தில் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வ இந்து கலாச்சார, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, நாவற்குடா இந்து கலாச்சார நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது.

இந்துக்கலாசார, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கிரான் பிரதேச செயலக பிரிவிலேயே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியினை இலக்கு வைத்தே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எல்லைப் பகுதியில் உடைக்கப்பட்டுள்ள ஆலயங்களை புனரமைத்து ஒரு கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பல இடங்களில் இருந்த இந்து ஆலயங்கள் காணாமல்போயுள்ளன. அதனை நாங்கள் பேசுவதில் எந்தவித பயனும் இல்லாவிட்டாலும் எல்லைப் பகுதியில் உள்ள ஆலயங்களை பேணிப்பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்து ஆலயங்களுக்கு உதவிகளைப் பெறுவது எட்டாக்கனியாக இருந்த நிலையில் இன்று சமயத்தினையும் தமிழையும் தனது உயிருக்கு நிகராக நேசிக்கும் அமைச்சராக கிடைத்துள்ளமை தமிழ் மக்கள் செய்த பாக்கியமாக கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.