மனைவியை கடுமையாக தாக்கிய கணவனுக்கு நடந்த நிலை..!

மனைவியை கடுமையாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று (04.06.2018) உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தலைவர் ஒருவர் மதுபோதையில் அடிக்கடி மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக இரு முறை அவரது மனைவியால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் குடும்பப்பிணக்கென்பதால் கணவனை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ,முன்தினம் அந்தக் குடும்பத்தலைவர் மனைவியை தாக்கியதைத் தொடர்ந்து மனைவி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனைக் கைது செய்த பொலிஸார் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.