மின்சாரவேலியில் சிக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சாரவேலியில் சிக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மத்தி, முறிப்பு பகுதியை சேர்ந்த கனகையா உதயகுமார் (45 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 13ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தி, நாயடிச்ச முறிப்பு வயல்வெளியில் நெற்பயிர் செய்கை செய்த விவசாயி, வயல் காவலுக்காக சென்றுள்ளார்.

குறித்த விவசாயி மறுநாள் 14ஆம் திகதி இரவுவரை வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கொக்குத்தொடுவாய் மத்தி வயல், காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த விவசாயி மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸார் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மீட்டு பிரத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.