முட்டாள்களாக்கப்பட்ட சிலருக்காக மாட்டு வண்டி சவாரி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் புகைப்பிடிக்கும் பாவனையினை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதற்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாட்டு வண்டியில், பறை மேளம் முழங்க குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

இன்று ஏப்ரல் முதலாம் திகதி. சர்வதேச முட்டாள்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரும் வகையில் சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடிச்சந்திவரையில் இடம்பெற்றதுடன் இந்த ஊர்வலத்தின் போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குகொண்டனர்.