யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் எழும் சந்தேகம்…!

ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் கிராமத்தில் வசித்த இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 வயதுடைய நவரத்தினம் பிரியங்கா என்னும் இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி தனது செல்லப்பிராணி ஒன்றிற்கு உணவு வைப்பதற்காக வெளியில் சென்ற சமயம், கிணற்றுக்குள் ஏதோ விழும் சத்தம் கேட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் குறித்த யுவதியின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் கிணற்றுக்குள் விழுந்திருக்காலாம் என்னும் சந்தேகம் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரதேச வாசிகளின் உதவியுடன் உறவினர் சிலர் கிணற்றுக்குள் இறங்கி தேடியுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 40 அடி ஆழத்தின் கீழிருந்து குறித்த யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட இந்த யுவதியின் திடீர் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேக கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமது பிள்ளை தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடப்பதற்கு 20 நிமிடங்களின் முன்னர் குறித்த யுவதி நண்பி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடும்பொழுது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) ஆலயம் ஒன்றிற்கு சென்று வருவது தொடர்பில் கலந்துரையாடியதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த யுவதி தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்வதற்குரிய சந்தர்ப்பம் அங்கே இருக்கவில்லை என்னும் கருத்தும் அங்கே பலமாக நிலவுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.