ரணில் கைவிடப்பட மாட்டார்..?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து கூட்டு எதிரணியால் நேற்று கையளிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியும் இறுதிநேரத்தில் ஆதரவளிக்கும் என மஹிந்த அணி அறிவித்தது.

இது தொடர்பில் வினவியபோதே ஐ.தே.க. உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

“பிரதமரைப் பலிக்கடாவாக்குவதற்கு அரசுக்குள் மாற்றுக் குழுவொன்று முயற்சிக்கின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது. பிரதமருக்கு எதிரான பிரேரணை விரைவில் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

அப்போது எமது பலத்தை நிரூபிப்போம். விரைவில் வரவேண்டும் என்பதுதான் எமது நோக்கமும்கூட” என்று ஐ.தே.கவின் எம்.பியான துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.

“பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது நிச்சயம் தோற்கடிக்கப்படும்” என்று இராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா, நளின் பண்டார உட்பட மேலும் சில எம்.பிக்கள் தெரிவித்தனர்.