விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரின் திருமண வீட்டை அலங்கரித்த முன்னாள் அமைச்சர்

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகளின் திருமண நிகழ்வு தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான க.வே.பாலகுமாரனும் அவரது மகன் சூரியதீபனும் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயிருந்தார்கள்.

இந்த நிலையில் இவரது மகள் மகிழினியின் திருமணம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

க.வே.பாலகுமாரன் ஈரோஸ் அமைப்பின் பொதுக் குழுத் தலைவராக இருந்த காலத்தில் பசீர் சேகுதாவூத் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் மு.காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சியை உருவாக்கிய நிலையில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான க.வே.பாலகுமாரனின் மகளுடைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.