வீதிக்காக வீதியில் இறங்கிய மக்கள்..!

நோட்டன் பிரிட்ஜ் தெப்ட்டன் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறுகோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் தெப்ட்டன் சந்தியிலிருந்து கொத்தலென்ன வரையிலான சுமார் 6 கிலோ மீற்றர் வரையான வீதி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குன்றும் குழியுமாக, மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் ஊடாக பயணத்தில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் விடுத்த வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறுகோரி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கருத்து வெளியிடுகையில்,

கடந்த காலங்களில் தேர்தல் காலப்பகுதி ஒன்றில் இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த அரசியல்வாதிகள் இப்பிரதான வீதியை புனரமைத்துத் தருவதாகவும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதிகள் அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும் வீதியை புனரமைப்பதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில் இத்தனை காலமாக காத்திருந்த மக்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் வீதிக்கு இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள், வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள், அவசர பிரயாணங்களை மேற்கொள்பவர்களின் நிலையை கருத்திற்கொண்டு உடனடியாக இப்பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.