விசாரணையை எதிர்கொள்ள நான் தயார் – ரிசாட் பதியுதீன்

தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

ரிசாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலில் நுழைந்ததில் இருந்து தனது சொத்து விபரத்தை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள், ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரிசாட் பதியுதீன் வெளிநாடு சென்றது தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். ஓமானிய அரச அதிகாரிகளுடன் இலங்கைக்கு பல மில்லியன் உதவித்திட்டமொன்றை பெறுவது தொடர்பாக விவாதிக்க சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

இரண்டு மனித வெடிகுண்டுகளின் தந்தையான இப்ராஹிம் ஹாஜியாருக்கும், தனக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுத்தார். தனக்கோ, சகோதரருக்கோ ஹாஜியாருடன் எந்த தொடர்பும் இல்லையென்றும், வர்த்தகர் சங்க தலைவராக அவர்களின் பிரச்சனையை பேச வந்தபோது சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

தனது சகோதரி, அவரது வீட்டை பயங்கரவாதிகளிற்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். தனது சகோதரி, கணவர் கனடாவில் வசிப்பதாகவும், கணவரின் வீட்டை பராமரிப்பாளர் ஒருவரிடம் வழங்கிவிட்டே சென்றதாகவும் தெரிவித்தார். அது பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் தனக்கு தெரியாமென்றும் கூறினார்.