கொடுமைப் படுத்திய தோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு!

0

அகரப்பத்தனை மன்றாசி நிவ் போட்மோர் தோட்ட தொழிலாளர்கள் 30.03.2018 அன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டவாறு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.தோட்ட தொழிலாளி ஒருவரை, தோட்ட முகாமையாளர் ஒருவர் 29.03.2018 அன்று இரவு தாக்கியமையை கண்டித்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய கிளாஸ்கோ தோட்ட முகாமையாளரை கைது செய்யும் வரை தமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்ராசி ஆக்ரா தோட்ட விருந்தகத்தில் 29.03.2018 அன்று தோட்ட முகாமையாளருக்கான விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது, விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட கிளாஸ்க்கோ தோட்ட முகாமையாளர் அதிக மதுபோதையில் அங்கு பணிப்புரிந்த இளைஞர் ஒருவரை தாக்கி, பின்னர் குறித்த இளைஞரை குளிர்சாதன பெட்டியில் வைத்து அடைத்துள்ளார்.

இதனையடுத்து மற்றுமொரு தோட்ட அதிகாரி குளிர்சாதன பெட்டியில் இருந்து தாக்குதலுக்குள்ளானவரை வெளியேற்றியுள்ளார். இதன்பின் மறுநாள் (30.03.2018) காலையில் தாக்குதலுக்குள்ளான தொழிலாளியை தோட்ட தொழிலாளர்கள் அகரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் பொலிஸ் முறைபாட்டில் நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளனர். அதேசமயம் இவ்வாறு குடிபோதையில் தாக்குதலை நடத்திய தோட்ட அதிகாரியை உடனடியாக கைது செய்யும் படியும், தாக்குதலினால் வைத்திய சிகிச்சை பெற்று வரும் தொழிலாளிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி பணிபகிஷ்கரிப்புடன் போராட்டம் ஒன்றிலும் ஈடுப்பட்டனர்.

இதனையறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தாக்குதலுக்கு ஆளான தொழிலாளிக்கு நீதி கிடைப்பதுடன், நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தோட்ட அதிகாரியை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here