500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தில்…!

0

அக்கரப்பத்தனை – டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டவாறு இரண்டாவது நாளாகவும் இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இத்தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது.

இந்த நிலையில் இவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக பல முறை கூறி ஏமாற்றியதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்தோடு தோட்ட அதிகாரியின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டகாரர்களால் எரியூட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று குறித்த தொழிலாளி தற்கொலை செய்ய முயற்சித்துள்ள போதும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மக்களை சந்திக்க சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், தொழிற்சங்கத்திற்கு சொன்னீர்களா என்றும் வினவியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய தொழிலாளர்கள்,

தொழிற்சங்கத்திற்கும், தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்கு தொண்டமான் இப்பிரச்சினையை எனக்கு பேசமுடியாது என்றும் கூறியுள்ளார்.

இ.தொ.கா தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பேச முடியும் என தெரிவித்ததாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த கண் பார்வையற்ற ஒருவர், நீங்கள் அப்படி சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

இதன்போது அவரை தரம் குறைவாக பேசியதுடன் தாக்கியதாகவும், இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் பொழுது நாங்கள் கட்சி பார்த்து செயல்படுவதில்லை. எங்களுடைய மக்களை தாக்குபவர்களை தான் நாங்கள் தலைவர்களாக வைத்திருக்கின்றோம். எனவே இதனை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அத்தோடு குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டனில் உள்ள தொழில் திணைக்களத்தில் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானத்தை பெற்றுக்கொடுப்போம் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here