இலங்கை குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

0

தம்மை நாடு கடத்த வேண்டாம் என இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எனினும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்தக் குடும்பத்தினரை நாடு கடத்த வேண்டாம் என்று இன்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொண்ட இந்தக் குடும்பம் நாடு கடத்தப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட போதும் சட்ட ஏற்பாடுகள் காரணமாக இறுதி நேரத்தில் கீழே இறக்கப்பட்டனர்.

இதன் பின்னரே தம்மை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று குறித்த குடும்பத்தினர் நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டமையை அடுத்து குறித்த குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க வைப்பதற்காக சிவில் சமூகத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன் குடிவரவுத்துறை அமைச்சரின் நல்லெண்ண நடவடிக்கையும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த குடும்பத்தினர் பெப்ரவரி வரை நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்ற அடிப்படையில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளையும் மெல்பேன் தடுப்பில் வைக்காமல், அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லேன்ட் பிலோலாவில் வைத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என பிலோலாவின் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளின் போது படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். இதன்பின்னர் இருவரும் குயின்ஸ்லேன்ட்டில் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் நடேசலிங்கம் இரண்டு தடவைகள், இலங்கைக்கு சென்று வந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அத்துடன் பிரியாவின் அடைக்கலக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here