மாகாணங்களை இணைக்கலாம் என்பதன் இராஜதந்திர இலக்கு என்ன?

0

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் சாத்தியமில்லை என்பது ஒருபுறம் உண்மையானாலும் மறுபுறம் இந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது அடுத்திருக்கும் மாகாணங்கள் இணையலாம் என்ற பொதுவான ஏற்பாட்டை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியதும் அவசியம்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணையலாம் என்ற ஏற்பாட்டை செய்யாமல் பொதுவாக அடுத்து இருக்கும் மாகாணங்கள் இணையலாம் என்ற ஏற்பாட்டை பற்றி சிந்திப்பது தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது.

எப்போதும் ஓர் அரசியல் நகர்வை அதற்கு இருக்கக்கூடிய இராஜதந்திர இலக்குக்களினால் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கும் சட்ட வார்த்தைகளுக்கு அப்பால் அந்த சட்டத்தின் மூலம் நிறைவேற்றவல்ல இராஜதந்திர இலக்கையும், அந்த சட்டத்தின் அடிப்படையில் நகர்த்தக்கூடிய நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு இருக்கக்கூடிய சாத்தியமான பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழான அரசியல் தீர்வை மாகாண அடிப்படையில் வரையறுத்து பின்பு தமிழரை ஏமாற்றுவதற்காக வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு என்ற ஓர் ஏற்பாட்டின் கீழ் அதனை வடிவமைத்து இறுதியாக அதனை தமது நடைமுறை வித்தையினால் இரண்டாகப் பிரிக்க முடிந்த இராஜதந்திர இலக்கை ஒரு சிறந்த படிப்பினையாக தமிழ் மக்கள் கொள்ள வேண்டும்.

இதுவிடயத்தில் இந்தியாவையும் தமது இராஜதந்திர வியூகத்தால் ஏமாற்றுவதில் சிங்களத் தலைவர்களும், இராஜதந்திரிகளும் வெற்றி பெற்றார்கள். இதுவிடயத்தில் தோல்வியடைந்தது தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவும்தான்.
தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய வடக்கு-கிழக்கு இணைந்த தாயகம் என்ற கொள்கையை அடிப்படையில் இல்லாமல் செய்வதே மாகாணசபைத் தீர்வு என்பதன் வியூகமாக அமைந்தது.

இங்கு தமிழரின் பிரச்சினை தாயகம் பற்றியதாகும். ஆனால் மாகாணசபை என்ற ஏற்பாட்டின் மூலம் தாயகம் என்ற அடிப்படையை இரண்டாகப் பிளக்கும் மூலோபாயத்தில் ஜெவர்த்தன வெற்றி பெற்றார்.

தற்போது உத்தேசிக்கப்படும் புதிய யாப்பில் ‘அடுத்து இருக்கும் மாகாணங்கள் இணையலாம்’ என்பது ஒரு சாதனை போல தமிழ்த் தரப்பால் பேசப்படுகிறது. இது சாதனையல்ல.

அழிவை உறுதிப்படுத்தவல்ல ஓர் இராஜதந்திர ஏற்பாடாகும். அதாவது கிழக்கு மாகாணம் அதனைச் சூழ நான்கு மாகாணங்களோடு அடுத்து இருக்கிறது. தென் மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் என்ற மூன்று சிங்கள மாகாணங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அத்துடன் தமிழ்ப் பகுதியாகிய வடமாகாணத்துடனும் எல்லையைக் கொண்டுள்ளது.

மணலாறு என்னும் தமிழ்ப் பகுதியை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் சிங்களப் பகுதியாக்கி அதற்கு வெலிஓயா என்று சிங்களத்தில் பெயர் மாற்றமும் செய்துள்ளார்கள். இந்த வெலிஓயாவை முல்லைத் தீவு மாவட்டத் தென்பகுதிக் கடலோரம் வரை நீட்டி வடமத்திய மாகாணத்தோடு இணைத்துவிட்டால் வடக்கும், கிழக்கும் பௌதீக ரீதியாகத் துண்டாடப்பட்டு அடுத்து இருக்கும் மாகாணங்கள் என்ற தன்மையை இழந்துவிடும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்கள் முல்லைத் தீவு கடலோரத்தை நோக்கி விரிவுபடுத்தும் திட்டம் தற்போது சர்ச்சைக்குரியதாக தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகிறது.

இதுவிடயத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் எக்கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் ஒரே மாதிரி விடாப்பிடியாக செயற்பட்டு வருவதை நடப்பு அரசியல் வரலாறு நிரூபித்து வருகிறது.

எனவே சிங்களக் குடியேற்றங்களின் மூலமும் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளின் மூலமும் வடக்கையும்-கிழக்கையும் நிலத் தொடர்பற்ற தமிழர் பகுதியாக்கும் திட்டம் ஒரு முழுநீள நோக்கோடு செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆதலால் தமிழ்த் தலைவர்களை சிறுபிள்ளைத்தனமாக அவ்வப்போது ஏமாற்றுவதன் மூலம் இதல் இறுதி வெற்றி அடைந்திடலாம் என்பது சிங்களத் தலைவர்களின் ஒரு வியூகமாகும்.

மறுபுறம் கிழக்கு மாகாணத்தை சிங்களப் பகுதியோடு இணைப்பது இன்னொரு திட்டமாகும். ஒருவகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்களக் குடியேற்றப் பகுதிகளை நிர்வாக ரீதியாக வடமத்திய மாகாணத்துடன் இணைத்திட முடியும்.
அதாவது வடமாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியை வடமத்திய மாகாணத்துடன் இணைக்க முடியும். அதேபோல கிழக்கு மாகாணத்தின் வடபகுதியையும் வடமத்திய மாகாணத்துடன் இணைக்க முடியும்.

இறுதியில் வடக்கில் இருந்து கிழக்கை பிரிப்பதில் அடையும் வெற்றியோடு கிழக்குவாழ் தமிழரைத் தனிமைப்படுத்தி கிழக்கு மாகாணத்தை அடுத்திருக்கும் மாகாணங்களான வடமத்திய மாகாணம் அல்லது தென்மாகாணம் அல்லது மத்திய மாகாணம் என்பனவற்றுடன் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக இணைத்திட முடியும். இதற்கு கிழக்கு மாகாணத்தில் இரண்டு ஏதுக்கள் உண்டு என சிங்களத் தலைவர்கள் நம்புகின்றனர்.

முதலாவதாக சுதந்திரமடைந்த காலத்தில் ஒரு வீத சிங்கள குடிப்பரம்பலைக் கொண்டிருந்த கிழக்கு மாகாணம் இன்று சுமாராக மூன்றில் ஒரு பங்கு குடிப்பரம்பலை சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக அடைந்திருக்கிறது.

அத்துடன் தமிழ் மக்களின் சனத்தொகை யுத்த அழிவினால் குறைந்ததுடன் மேலும் யுத்த நெருக்கடி இடப்பெயர்வுகளாலும் சனத்தொகை குறைந்தது. அத்துடன் யுத்தகால உயிர் இழப்புக்கள் இடப்பெயர்வுகளின் மூலம் இயற்கையான சனத்தொகை வளர்ச்சிக்கான வலுவை கிழக்குவாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

ஆக, இவ்வாறு புதிய அரசிலமைப்பு வருகிறதோ இல்லையோ…சிந்திக்க வேண்டிய பல சமாச்சாரங்கள் அதிலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here