ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலையில் நடந்த விடயம்!

0

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இருவரும் கல்வி பயிலும் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கருணை மகஜரொன்றை இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் குறித்த கருணை மகஜரில் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதன்போது 2500 இற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், இதில் கிளிநொச்சி வலய கல்வி பணிமனையினர், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து கையொப்பம் பெறப்பட்ட மகஜர் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர்,

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும் இங்கேயே கல்வி கற்கின்றனர். இவர்களின் கடந்தகால செயற்பாடுகளுக்கு மாறாக தற்போது அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கல்வி கற்க விருப்பமற்றவர்களாக, அதிக யோசனையில் உள்ளவர்களாகவும், தனிமையை விரும்புபவர்களாகவும் இவர்கள் இருப்பதை கண்டு பாடசாலை சமூகமாகிய நாம் மிகவும் கவலை அடைகின்றோம்.

இவர்களின் இந்த நிலையை மாற்றுவதற்கு ஆனந்த சுதாகரை விடுதலை செய்ய சம்மந்தப்பட்டவர்களை பாடசாலை சமூகம் இணைந்து வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க செயலாளர்,

இந்த மாணவர்களின் நிலை போன்று யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

இதற்காக நாம் 3 இலட்சத்திற்கும் அதிக கையெழுத்துக்களை கல்வி சமூகம் சார்பில் பெற்று வட மாகாண கல்வி அமைச்சு ஊடாக வட மாகாண ஆளுநர், ஐ.நா சபை, ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜரை அனுப்ப உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தொடர்பில் பாடசாலை மாணவியொருவர் தெரிவிக்கையில்,

இந்த சிறார்கள் தாயை இழந்து, தந்தையின் பாசத்திற்காக ஏங்கி நிற்கின்றார்கள். இந்த நிலையில் இவர்களின் தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் தயவுடன் வேண்டுகின்றோம்.

இவர்கள் பாடசாலையில் தனிமையை உணவர்வதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here